Friday 1 February 2013

எழுமின் விழிமின் – 1


எழுமின் விழிமின் 


வீன பாரததத்தின் புத்தெழுச்சிக்கும், நவீன இந்து மறுமலர்ச்சிக்கும் வித்திட்ட ஞான சூரியன் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நூற்றாண்டு விழாவாக 2013ம் ஆண்டு மலரவிருக்கிறது. பாரத தேசமும், உலகம் முழுவதும், இந்த விழாவினைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இந்தப் புனித தருணத்தில் சுவாமி விவேகானந்தரின் எழுச்சி மிகு  சிந்தனைகளை  இந்தப் புதிய தொடரில் தொகுத்து வழங்குவதில் தமிழ்ஹிந்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது. இத் தொடர் அடுத்த 10மாதங்களுக்கு சுவாமிஜியின் சிந்தனை அமுதத்தைத் தாங்கி வரும்.
இந்தத் தொடரின் பகுதிகள் முழுமையாக விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “எழுமின் விழிமின்”என்ற நூலிலிருந்து எடுக்கப் பட்டுள்ளன.
சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழா 1963ம் ஆண்டு கொண்டாடப் பட்டது. அப்பொழுது மாபெரும் சமூக சேவகராக இருந்த ஏகநாத் ரானடே அவர்கள் விவேகானந்த கேந்திரம் என்ற அமைப்பை நிறுவினார். கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் உலகம் போற்றும் நினைவுச் சின்னம் எழுப்பியது இந்த அமைப்பின் பெரும் சாதனையாகும். அந்த தருணத்தில் ரானடே அவர்கள் சுவாமிஜியின் சிந்தனைகள் என்ற பெருங்கடலில் இருந்து மையமான சமூக, தேசிய, ஆன்மிக சிந்தனைகளைத் திரட்டி,Arise Awake: Rousing call to the Hindu nation என்ற தொகுப்பை உருவாக்கினார். அதே வருடம் அதனைஆர்.கோபாலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து “எழுமின் விழிமின்” என்ற பெயரில் வெளிவந்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 2003ம் ஆண்டு இந்த நூலின் பத்தாம் பதிப்பு வெளிவந்தது.14ம் பதிப்பு விரைவில் வர இருக்கிறது.
50 வருடங்கள் கடந்த பின்னரும் இந்தப் புத்தகம் புத்தொளியுடன் மிளிர்கிறது என்றால், அதற்கு உணர்ச்சி மயமான மொழியில் ஆர்.கோபாலன் அவர்கள் செய்த ஜீவசக்தி ததும்பும் மொழியாக்கமே முக்கியக் காரணம் என்று கூறலாம். தமிழகமெங்கும் விவேகானந்தரின் சிந்தனைகளை எடுத்துச் சென்றதில் வேறு எந்த நூலையும் விட இந்த நூலின் பங்கு மகத்தானது.
********
‘சுவாமிஜியின் உள்ளம் ஒரு பெரிய சமுத்திரம். சாதாரண சமுத்திரமன்று; சிறந்த இரத்தினாகரம். அதில் அடங்கியுள்ள சிறந்த கருத்துக்களாகிய இரத்தினங்கள் அளவிலடங்கா. அவற்றின் மதிப்பும் ஒளியும் ஒன்றும் நிலையானவை; காலத்துக்குக் காலம் மாறுபாடில்லாதவை; இந்திய மக்கள் ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிலையாக விளங்கி ஒளிரத் தக்கவை. அவற்றுள் முக்கியமானவை சில மட்டுமே இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. முழுமையும் காண விரும்புவோர் இவை எடுக்கப் பட்ட முதல் நூலுக்குள் செல்ல வேண்டும்’
என்று பத்தாம் பதிப்பின் பதிப்புரை சொல்கிறது.
ஏகநாத் ரானடே அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் -
ஏக்நாத் ரானடே
‘சுவாமிகளின் உபதேச மொழிகளை நாம் சுருங்கக் கூறின், அவர் நமக்கு ஒரு மகா மந்திரத்தை உபதேசம் செய்ததாக் குறிப்பிடலாம். அது தான் தெய்வ நம்பிக்கையும், தன்னம்பிக்கையும் தேவை என்பது. தன்னம்பிக்கையானது உபநிஷத பேருண்மையை அடிப்படையாகக் கொண்டது. “நான் ஆத்மா; என்னை வாள் வெட்டாது. ஆயுதங்கள் துளைக்காது. நெருப்பு எரிக்காது. காற்று உலர்த்தாது. நான் சர்வசக்திமான்” என்று உபநிடதம் முழங்குகிறது. இந்த மந்திரத்த்தைத் தான் சுவாமி விவேகானந்தர் சதா சர்வ காலமும் நமது நாட்டினருக்கு ஆணியடித்தாற்போலப் புகட்டினார். அவர் பேசியவற்றில் எல்லாம், அவரது அருள்மொழியில் எல்லாம், இந்த மந்திரமே முழங்கிற்று. இதுவே அவரது உபதேச கீதத்தின் பல்லவியாக இருந்தது. இவ்வுண்மையின் உட்பொருளை நாம் புரிந்து கொண்டு அதற்குத் தக வாழ்வதற்கான தக்க தருணம் இதுவே. அவ்வாறு நாம் செய்தால், உலகிலுள்ள எந்த சக்தியும் நமக்குத் தீங்கிழைக்க முடியாது… ‘
‘இன்று நாடானது தனது சுதந்திரத்தையும், தனது வருங்காலத்தையும், தனது தர்மத்தையும் தொடர்ந்து பாதுகாப்பதற்காக ஆயத்தம் கொள்ள வேண்டிய நெருக்கடியான சரித்திரக் கட்டத்தில் வாழ்கிறது. இந்த வேளையில் நமது நரம்புகளில் முறுக்கேற்றவும், நமது உறுதிக்கு வலுவூட்டவும் இந்த உபதேசம் மிக அரியதாகும். உறுதுணை புரிவதாகும்..’
‘ஹிந்து தேசத்திற்கு சுவாமிகள் அருளுகிற மற்றொரு உபதேசமும் உண்டு. தமோ குணத்தை நாம் கைவிட வேண்டுமென அவர் கூறுகிறார். ஏனெனில் தமோ குணமானது பலவீனத்தையும், மூட நம்பிக்கையையும், அற்பத் தனத்தையும், சிறு விஷயங்களுக்கான பரஸ்பரச் சண்டை பூசல்களையும் உருவாக்குகிறது. இந்த இழிகுணங்களைக் கைவிட்டு ஒற்றுமை, சங்கம் சேர்த்து இணைந்து பணியாற்றுதல் ஆகிய பாறை போன்ற அடிப்படைகளின் மீது மகாசக்தியை நாம் நிர்மாணிக்க வேண்டும். இவ்வாறு தனித்தனியான நமது விருப்பங்களை ஒன்றுகூட்டி இணைத்து, நமது பழங்காலத்தையும் மிஞ்சக் கூடிய சிறப்புயர்வு வாய்ந்த வருங்காலத்தை நாம் நிர்மாணிக்க வேண்டும்..’
‘சுவாமிகளின் கட்டுரைகளும், அருளுரைகளும் தத்துவம், சமயம், சமூகவியல் ஆகிய விஷயங்களைப் பற்றி மட்டுமின்றி, கலை, சிற்பம், சங்கீதம் உள்ளிட்ட பல்வேறு விதவிதமான விஷயங்களையும் தாங்கியவை ஆகும். இங்ஙனம், உலகியல் துறை, ஆன்மீகத் துறை ஆகிய இவ்விரு துறைகளையும் சார்ந்து அவை உள்ளன. இத்தொகுப்பில், நமது பழங்காலச் சிறப்பை உணர்த்தும் சில பகுதிகளையும், நமது இன்றையத் தாழ்நிலையின் காரணங்களை ஆராய்ந்து நம்மை சிறப்பான வருங்காலத்தை நோக்கி உந்தித்தள்ளி, அதற்காக நம்மை ஆயத்தப் படுத்துகிற பகுதிகளையுமே குறிப்பிட்டுத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அதுவே நமது திட்டவட்டமான சிறிய உத்தேசமாகும்..’
‘சுவாமிஜியின் உபதேசச் செய்தியை எவ்வித விளக்கமோ கருத்துரையோ இன்றி அவரது சொந்தச் சொற்களாலேயே தொகுத்துப் புத்தகமாக சமர்ப்பிக்க வேண்டும் என்பது நம் கருத்து. ஆகையால், புத்தகம் முழுவதும் சுவாமிகளின் சொந்தச் சொற்களாலேயே உருவாகியுள்ளது. தலைப்புகள், துணைத்தலைப்புகள் கொடுத்தது, விஷயங்களை ஒரு வடிவத்தில் தொகுத்து இணைத்தது, இவை மட்டும் தான் தொகுப்பாளரின் வேலை. சிற்சில இடங்களில் தெளிவு ஏற்படுத்துவதற்காக, உரிச்சொல்லுக்குப் பதிலாக பெயர்ச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது… தனித்தனியான ஒவ்வொரு பகுதியும் மேற்கோள் குறியின்றி ஏன் உள்ளது என்பதன் காரணம் வாசகர்களுக்குத் தெளிவாகத் தெரியும், ஏனெனில் ஒரு விதத்தில் இந்த நூல் முழுவதுமே மேற்கோள் குறிக்குட்பட்டுத் தான் அமைந்துள்ளது..’
********
இந்தப் புத்தகம் நான்கு பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது:

(1) உபதேச மொழி:
நமது தேசத்தின், சமூகத்தின், தர்மத்தின் நிலை பற்றி சுவாமிகள் கொண்டிருந்த மையமான கருத்துக்களை முக்கியமாகக் கொண்ட பகுதி இது.

(2) பிரசங்கங்கள், உரைகள், கட்டுரைகள் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகள்:
சில முக்கியமான விஷயங்கள் குறித்து சுவாமிஜி கொண்டிருந்த கருத்துகளை வாசகர்களுக்கு உணர்த்தும் பகுதி இது. உபதேச மொழி பகுதியுடன் தொடர்புள்ள இக்கருத்துக்களை முதல் பாகத்தில் பொருத்தி வைக்க முடியவில்லை, அல்லது அங்கு சுருக்கமாக அவை கூறப்பட்டிருக்கும்.

(3) சில கண்ணோட்டங்களும் கண்டனங்களும்:
சுவாமிஜி விஷயங்களை அமைதியாகவ்ம், அறிவு பூர்வமாகவும் அணுகி ஆராய்ந்தார். ஆனால் அதற்குப் பின்னணியாக மகத்தான ஆவேசமும் உணர்ச்சியும் அவரை ஆட்டுவித்தன. இப்பகுதியில் உள்ளவை வாசகர்களுக்கு சுவாமிஜியின் இதயத் துடிப்பையும், அவரது மனம் வேலை செய்த முறையையும் சித்தரித்துக் காட்டுவதற்காகத் தொகுக்கப் பட்டவையாகும்.
(4) ஆண்மை ஊட்டுதல் அல்லது ஊழியர்களை உருவாக்குதல்:
சுவாமிகள் பல இடங்களில் தேச நிர்மாணப் பணியில் பங்கு கொள்ள விழைபவர்களுக்கான மன அமைப்பைப் பற்றியும், மனதுக்கும் அறிவுக்கும் தேவையான சில குணங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஒற்றுமை இயக்க அமைப்பு, தலைமை தாங்கும் குணம், நிறைவான வாழ்க்கையின் ரகசியம், பணிபுரியும் கலை ஆகிய விஷயங்கள் குறித்த, நடைமுறையில் தனிமனிதருக்கு வழிகாட்டும் உயர் படிப்பினையாக அமைந்த கருத்துக்கள் இப்பகுதியில் தொகுக்கப் பட்டுள்ளன.
இந்தத் தொகுப்பு நூலின் வாசகர்கள் இதன் மூலம் ஊக்கம் பெற்று விவேகானந்தரின் சிந்தனைகளை, முழுமையாக முதல் நூல் வடிவில் கற்க ஆர்வமும், ஊக்கமும் பெற வேண்டும் என்பதையே தனது உள்ளக் கிடக்கையாக ரானடே அவர்கள் கூறியிருந்தார். நாமும் அதையே வழிமொழிகிறோம்.

*****
|| ஓம் ||
முதல் பாகம் – உபதேச மொழி
தெய்வீகச் செய்தி
நான் கூறுவதைக் கவனத்திற் கொள்க. ஹிந்து என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்குள் சக்தி மின் அலையைப் போலப் பாயவேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதர், எந்த நாட்டினராயினும், நமது மொழியோ அல்லது வேற்று மொழியோ பேசினாலும், அந்தக் கணமே உங்களுக்கு மிகமிக நெருங்கியவராகவும், இனியவராகவும் ஆகிவிட வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே, நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதருக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.
மகாபுருஷனான குருகோவிந்த சிங்கனைப் போல, ஹிந்துக்களுக்காக எதையும் தாங்கச் சித்தமாக இருக்கும்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் ஹிந்து ஆவீர்கள். ஹிந்து சமயப் பாதுகாப்புக்காக தனது ரத்தத்தைச் சிந்திய பிறகும், தனது குழந்தைகள் போர்க்களத்தில் கொல்லப் படுவதைக் கண்ட பிறகும் – ஆகா! அந்த மகாபுருஷனான குருவின் உதாரணம் தான் என்னே! – யாருக்காகத் தமது உதிரத்தையும், தமது நெருங்கிய மக்களின், இனியவர்களின் உதிரத்தையும் சிந்தினாரோ அவர்களே தம்மைப் புறக்கணித்துக் கைவிட்ட பிறகும் கூட – அவர், அந்தப் படுகாயமுற்ற சிங்கம் – களத்திலிருந்து ஓய்ந்து வெளிவந்தது, தெற்கே வந்து மடிய! நன்றிகெட்டுத் தம்மைக் கைவிட்டவர்களைக் குறித்து ஒரு பழிச்சொல்லைக் கூட அவர் தப்பித் தவறியும் வெளியிடவில்லை.
கவனத்திற் கொள்ளுங்கள். உங்களது நாட்டுக்கு நன்மை செய்ய நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குரு கோவிந்த சிங்கனாக ஆகவேண்டும். உங்களது நாட்டு மக்களிடையே ஆயிரக் கணக்கான குறைபாடுகளை நீங்கள் காணலாம். ஆனால் அவர்களது ஹிந்து இரத்தத்தைக் கவனியுங்கள். உங்களைத் தாக்கிப் புண்படுத்த அவர்கள் நினைத்தாலும் அவர்களே உங்கள் முதல் வழிபாட்டிற்குரிய தெய்வங்கள். அவர்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குச் சாபமாரி பொழிந்தாலும், நீங்கள் அவர்களுக்கு அன்பு அருள் மொழிகளையே திருப்பியளிக்க வேண்டும். உங்களை அவர்கள் வெளியே துரத்தினால், மகா சக்திசாலியான அந்த சிங்கத்தைப் போல, குரு கோவிந்த சிங்கனைப் போல, வெளியே வந்து அமைதியாக இறக்க வேண்டும். ஹிந்து என்ற பெயர் தாங்க அத்தகைய மனிதனே தகுந்தவன். அத்தகைய லட்சியத்தையே நாம் எப்போதும் நம் முன் வைத்திருப்போமாக.

நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளைக் குழி தோண்டிப் புதைத்து விடுவோம். நாற்றிசையில்லும் இந்த அபாரமான அன்புணர்ச்சி அலையைப் பரப்புவோம்.– 1

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.